கொங்கு நாடு (உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்),கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், நாமக்கல் மாவட்டம், சேலம் மாவட்டம், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகள், திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகள், கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள்) பிறந்த இளைஞர்களுக்கு இப்போது திருமணம் என்பது பெரும்பாலும் அவர்களிடம் உள்ள பணத்தின் அளவைக் கொண்டே தீர்மாணிக்கப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் பிறந்த என்னையும் விட்டுவைக்கவில்லை இந்த பெண் பார்க்கும் படலம். எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்து ஏதேனும் ஒரு பெண் வீட்டிற்கு ஜாதகம் கொடுத்தனுப்பினால் பெண் வீட்டாரின் முதல் கேள்வியே.
1. பையன் வீட்டுல சொத்து எவ்வளவு இருக்கும்?
பொதுவா பையன் வீட்டு சொத்து அதிகமா இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் சொல்லவே வேண்டாம் அத்தனை சொத்தும் பாட்டன் முப்பாட்டன் பெயரில் தான் இன்னும் இருக்கும். பல வாய்கால் வரப்பு பஞ்சாயத்துக்களும், அங்காளி பங்காளி சண்டைகளிலும், மாமன் மச்சான் தகறாரிலும் இருக்கும். இந்த சொத்து பஞ்சாயத்தே வேண்டாம்னு பலர் டிகிரி முடிச்சுதும் வேலை தேடி ஒரு நிலைக்கு வந்திருப்பாங்க.
2. தென்னந் தோப்பு இருக்கா ?
பொண்ணுக்கு தேங்கா சட்னி வைக்க தெரியுதோ இல்லையோ கண்டிப்பா பையன் வீட்டுல ஒரு தென்னந்தோப்பு இருக்கவேண்டும். எங்க ஊர்ல ரெண்டாயிரம் அடிக்கு கீழ தண்ணி இருக்கு, நீங்க வேணா ஒரு ஆழ்துளை கிணறு போட்டு குடுங்க நாங்க தோப்ப பாத்துக்குறோம். நாங்க எங்க போர் போட்டாலும் பொகதான் வருது.
3. பையன் என்ன படிச்சிருக்குறான் ?
குறைந்தபட்சம் இரண்டு பட்டப்படிப்புகள் இருக்க வேண்டும். எப்படியோ இந்த கேள்விக்கு பதில் சிலரிடம் இருக்கும்.
4. விவசாய நிலம் இருக்கா? ஆனால் பையன் விவசாயம் செய்யக்கூடாது!!
அப்படினா தென்னந்தோப்பும் விவசாயம் இல்லையா. எதற்கு அந்த இரண்டாவது கேள்வின்னு தெரியல. விவசாய நிலத்தை வெச்சிட்டு விவசாயம் பண்ணாம வின்தட்டா செய்யமுடியும். ஒருவேள கல்யாணம் முடுஞ்சதும் நெலத்த சைட் போட்டு விப்பங்கலோ.
5. சொந்தத்தொழில் இருக்க?
அப்போ விவசாயம் தொழில் இல்லையா, சரி அது வேற பிரிவா இருக்கும். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் தொழில் என்றால் அது துணி நெசவுதான். நாங்க நெசவு பண்ண ரெடி நீங்க நூல் மட்டும் போடுங்க. நாங்க ரெடி நீங்க ரெடியா?
6. சம்பளம் ஒரு ஐம்பதாயிரம் வருமா?
சொந்தகாரங்க யாரவது தொழில் பண்ணுனா அவுங்க தொழில்கூடம் அல்லது அவர்கள் சிபாரிசு நிறுவனங்களில் வேலை செய்தால் ஒரளவு கிடைக்கும். உங்களுக்கு சொந்தகாரங்க யாரவதுக்கு நிறுவனம் இருக்கா?
7. டெரஸ் வீடு?
டெரஸ் வீடு என்பது இப்போ ஒரு கௌரவ பிரச்சனை, பொண்ணு வீட்டைவிட பெரிய வீடா இருக்கனும். மூணு படுக்கையறை ஒரு சமையலரை, ஒரு சாப்பாட்டு அறை, பூஜை அறை, ஹால், போர்டிகோ, வரண்டா, கார் பார்கிங் வேணும்னு சொல்லுறீங்களே உங்க பொண்ணுக்கு இதையெல்லாம் சுத்தம் செஞ்சு பராமரிக்க எவ்ளவு கஷ்டம்னு உங்களுக்கு தெரியுமா.
8. கார்?
சீதனமா பெண்வீட்டார் கார் கொடுத்தாலும், பையன் வீட்டில் ஒரு கார் இருக்க வேண்டும். இருக்குற வண்டிக்கே இ.எம்.ஐ, பெற்றோல், இன்சுரான்ஸ், சர்வீஸ் செலவுனு மனுஷன் பாதி நொந்திருபான்.
இதெல்லாம் சொந்த வீடு மட்டுமே வைத்திருக்கும் பெண் பிள்ளையின் பெற்றோரின் கட்டளைகள்.
விவசாய நிலம் உள்ளவர்களின் கண்டிஷன்கள் இதைவிட அதிகம்...
இப்போ திருமண வயது இருக்கும் பெண்கள் பெற்றோரின் பேராசைகள் ஒரு அளவை தாண்டி போய்விட்டது.
மனங்களை இணைக்கும் திருமணங்களின் நிலை மாறிவிட்டது.
பத்தாததுக்கு இந்த ஜோசியகாரங்க பொருத்தம் இருந்தாலும் குறை சொல்லுவாங்க.
அடுத்தது தரகர்கள், திருமணமானது கூட தெரியாம பொண்ணு ஜாதகத்த கொடுத்து நம்ம மனச கெடுபாங்க.
முப்பது வயசு முதிர்கன்னிகன்னிகள் அதிகம்.
இதெல்லாம் தாண்டி திருமணம் நடக்குமானால் அதைக் கெடுக்க பல குரூப் இருக்கு. சொந்தத்துக்குல்லையே ஓராயிரம் எட்டப்பன்கள் வேற.
இதையெல்லாம் தாண்டித்தான் பையனின் கேரக்டர்.
சரி அவங்க எதிர்பார்த்த வசதி இருந்தால் பையன் மீது காவல் நிலையத்தில் புகார் இல்லாமல் இருந்தால் மட்டுமே போதும்.
வேறு ஏதாவது தவறுகள் இருந்தால் திருமணத்திற்குபின் எல்லாம் சரியாகிடும் என்று அவர்களே முடிவெடுத்துக் கொள்வார்கள்.
பெண் வீட்டின் கடன்களை அடைத்துவிட்டு திருமணம் செய்து கொண்டவர்களும் இங்குண்டு
(ஒரு சில பெற்றோர்கள் விதிவிலக்கு. அளவான வசதி பையனின் குணம் போதுமென்று பெண் கொடுத்தோரும் உண்டு)
பணமே முக்கியமாக மாறிவிட்ட கொங்கு மண்டலத்தில் கல்யாண வாழ்க்கை என்பது பல இளைஞர்களுக்கு கனவாகவே இருக்கிறது (நானும் அடக்கம்).
அப்படியே ஜாதகம் பார்த்து, சொத்து பார்த்து, உறவுகள் சமதம் கிடைத்து திருமணம் படு ஜோராக நடந்தாலும், பல ஜோடிகள் சிலவருடத்தில் நீதிமன்ற வாசலில் தான் நிற்கிறார்கள்.
அத்திக்கடவு தண்ணீர் வரும் ஆனா வராது, என் பாட்டன் காலத்தில் போட்ட திட்டம் இப்போது திட்டம் தான் போடுறாங்க. என் பேர குழந்தைவந்தாலும் இதற்காக போராடும். குடிக்க கூட காசுகொடுத்து தண்ணீர் வாங்கும் நிலமைதான் இப்போ இந்த கொங்கு மண்டலம் இருக்கு. இதற்கு பேராசைகளுமே காரணம்.
இனியாவது சொத்து, கெளரவம், அந்தஸ்து, ஜாதக பொருத்தம் பார்க்காமல் இருமனங்களுக்காக திருமணங்கள் நடந்தால் இளைய தலைமுறை நிம்மதியாக இருப்பார்கள்...
ரௌத்ரம் கலந்த வேதனையுடன் - மணமாகாத ஆடவன்.
கருத்துரையிடுக